Skip to main content
சற்று முன்

102 எம்.எல்.ஏக்களுடன் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

102 எம்.எல்.ஏக்களுடன் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

mla admk
Nitheesh
Moderator
Submitted by nitheesh on 3 January 2018

அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது.

 

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 8ஆம் தேதி தொடங்குகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைப்பெற்றது.

 

வழக்கமாக, பேரவை கூடுவதற்கு முதல் நாளில்தான் எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்கும். தற்போது முன்கூட்டியே அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்படுகிறது.  பேரவைக் கூட்டத்தில் சுயேச்சை எம்எல்ஏவாக தினகரன் பங்கேற்கிறார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் பங்கேற்க முடியாது. 

 

இந்தக் கூட்டத்தில் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி, அறந்தாங்கி எம்.எல்.ஏ. இரத்தினசபாபதி, விருத்தாச்சலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன் ஆகியோர் டிடிவி ஆதரவால் வரவில்லை. 

 

ஆக, மீதமுள்ள 111 எம்.எல்.ஏ.க்களில் 7 பேர் பல்வேறு காரணங்களால் வர இயலவில்லை என்று தகவல் வந்துள்ளது. ஆறுமுகம், சிவசுப்பிரமணியன் ஆகியோர் உடல்நலக்குறைவாலும், அமைச்சர் செல்லூர் ராஜு, பிரபு, பவுன்ராஜ் ஆகியோர் சபரிமலை சென்றுள்ளதாலும், அமைச்சர் கடம்பூர் ராஜு, அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் சிவங்கையில் நடைபெறும் வேலுநாச்சியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றுள்ளதாலும் இன்றைய எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

 

இதன்படி, இன்று 104 எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆஜராக வேண்டும். இறுதியாக கிடைத்த தகவல்களின் படி இந்தக் கூட்டத்தில் 102 எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட நாட்களுக்குப் பிறகு வரும் 8ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றிபெற்ற டிடிவி தினகரன் கலந்துகொள்வார் என்பதால், அதுகுறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.