Add1
logo
Logo
இனிய உதயம்
சென்னிமலை தண்டபாணி
 ................................................................
எம்.ஜி.ஆர் தமிழரா?
 ................................................................
கண்களின் ஜல்லிக்கட்டு
 ................................................................
தமிழ் வானில் என் சிறகசைப்பு!-முனைவர் நா.நளினிதேவி
 ................................................................
லிங்குசாமி கவிதைகள்
 ................................................................
என்ன செய்யப் போகிறீர்கள்?
 ................................................................
01-01-2018
மோடியின் குஜராத் வெற்றியும், தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றியும்  பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.

"அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.'

என்பார் திருவள்ளுவர். இதன் பொருள், மற்றவர்கள் வலிமையை கருத்தில் கொள்ளாமல், தன் வலிமையையும் உண்மையாக உணராமல், தன்னைத் தானே பெரிதாக  நம்பிக்கொண்டிருப்பவர்கள் விரைவாக தீமையை அடைவார்கள் என்பதாகும்.

தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., ஆளும் அ.தி.மு.க. ஆகிய அனைத்துக் கட்சிகளுக்குமான திருவள்ளுவரின் அறிவுரைதான் இது. குறிப்பாக குஜராத்தில் காங்கிரஸும், இங்கே தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளும், தங்கள் ஆற்றலைப் பெரிதாக எண்ணி, எதிரியைச் சரியாக எடைபோடவில்லை. அதனால்தான் இவர்களின் தலையில் சம்மட்டி அடி விழுந்திருக்கிறது. நாம் சிறுவயதில் கேட்ட முயல் ஆமை கதையைப்போல், எதிரியை ஆமையாகக் கருதி, இங்கே முயல்கள் வெற்றியைக் கோட்டை விட்டிருக்கின்றன.

பிரதமர் மோடி தனது மாநிலமான குஜராத்தை வெற்றிகரமாகத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். 6-ஆவது முறையாக பா.ஜ.க. அங்கே அரியணை ஏறிவிட்டது. காரணம், மோடியின் விடாமுயற்சி. அதை நாம் லேசாக எடைபோட முடியாது.நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி, பிரதமர் பதவியைக்கூட சரிவரப் பார்க்காமல் உலகம் சுற்றும் வாலிபராகத் திகழும் மோடி, தனது குஜராத் மாநிலத்தை எந்தக் காரணம் கொண்டும் காங்கிரஸிடம் பறிகொடுத்துவிடக்கூடாது என்று முடிவெடுத்துக் களம் இறங்கினார். பிரதமரான மோடி 32 தடவை குஜராத்தில் போய் பிரச்சாரம் செய்திருக்கிறார்.

ஆனால் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் ராகுல்காந்தி, 12 நாட்கள் மட்டுமே குஜராத்திற்குப் போய் முகம்காட்டியிருக்கிறார். பா.ஜ.க.வின் இந்துத்துவா நடவடிக்கைகள்மீதான மக்களின் அதிருப்தியும், மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி. போன்ற வரிவிதிப்புச் சுமையும் பா.ஜ.க.வைத் தோற்கடித்துவிடும் என காங்கிரஸ் எளிதாகக் கணக்குப் போட்டது.

ஆனால், அந்த மாநிலத்தில் காங்கிரஸுக்கு தலைவரே இல்லை. மிஞ்சி இருக்கும் காங்கிரஸின் முக்கியப் பிரமுகர்களை எல்லாம் அதிரடியாக விலைக்கு வாங்கிய பா.ஜ.க., வாக்காளர்களையும் எளிதாக ஏமாற்றி வாக்குகளை அறுவடை செய்துவிட்டது.

நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் மோடியின் நோக்கமும், வியூகமும், விடாமுயற்சியும், உழைப்பும் வெற்றிபெற்றுவிட்டது என்பதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

நான் முகநூல் பார்ப்பதில்லை. ஆனால் நக்கீரன் பொறுப்பாசிரியரான தம்பி லெனின், தனது முகநூலில்...

"காங்கிரசில் ஓர் இளவரசர் (ராகுல்) இருக்கிறார். ஆனால், மாநில அளவில் தளபதிகள் இல்லை. தி.மு.க.வுக்கு ஒரு தளபதி இருக்கிறார். ஆனால், மாவட்டங்கள்தோறும் சிற்றரசர்கள் இருக்கிறார்கள். இவை மாறாதவரை, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என ஆறுதல் அடைவது ஒன்றே வழி' என்று இந்தத் தேர்தல் தோல்விகள் பற்றித் தன் கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார்.

உண்மைதான். காங்கிரஸுக்கு ராகுல் என்ற இளவரசர் கிடைத்துவிட்டார். ஆனால் மாநிலங்கள்தோறும், மாவட்டங்கள்தோறும் அக்கட்சிக்குத் தளபதிகள் இல்லை. அதேபோல், இங்கே தி.மு.க.விற்கு தளபதி இருக்கிறார். அதற்கு மாவட்டங்கள்தோறும் கட்சிக்காக உழைக்கவேண்டிய மா.செ.க்கள் அத்தனை பேரும், எதைப் பற்றியும் கவலைப்படாத சிற்றரசர்களாக இருக்கிறார்கள். அதனால் மக்களின் மனதை அவர்களால் ஈர்க்கவோ, வெற்றிபெறவோ முடியவில்லை.

குஜராத்தில், மக்களின் அதிருப்தியின்மீது காங்கிரஸ் வைத்திருந்த நம்பிக்கை தோற்றதுபோல், ஆர்.கே.நகரில் தி.மு.க. வைத்திருந்த நம்பிக்கையும் அப்பட்டமாகத் தோற்றுப்போய்விட்டது.

இந்த அ.தி.மு.க. அரசின்மீது இருக்கும் அளவுகடந்த அதிருப்தியும், தங்கள் கட்சியின் பலமும், கூட்டணிக் கட்சிகளின் அரவணைப்பும் நம்மை எளிதாக ஜெயிக்கவைத்துவிடும் என்று தி.மு.க. போட்ட கணக்கு, தோற்றுப்போய்விட்டது.

ஸ்டாலின் தேர்தலுக்கு முன்னதாக இரண்டு  நாட்கள் தொகுதிக்குப் போய்ப் பிரச்சாரம் செய்தார். மிச்சத்தை தொகுதியில் முகாமிட்டிருக்கும் மா.செ.க்கள் எல்லாரும் பார்த்துக்கொள்வார்கள் என்று நம்பினார்.ஸ்டாலின் வரும்போது மட்டும் ஐந்நூறு ஆயிரம் பேரைத் திரட்டி வைத்துக்கொண்டு அவரை வரவேற்றார்கள். அவருக்கு வாழ்த்துகோஷம் போட்டார்கள். அதன்மூலம் அவரை மகிழ்ச்சிப் படுத்தி அனுப்பிவைத்தார்கள். அதைப் புகைப்படம் எடுத்தும் முகநூலில் போட்டுக்கொண்டார்கள். மற்ற நேரத்தில் தொகுதியில் இருக்கும் ஏதாவது ஒரு கட்சிக்காரர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு அரட்டையடித்தார்கள்.

ஆனால் சுயேச்சை வேட்பாளரான தினகரன் என்ன செய்தார்? வெற்றியைக் குறிவைத்த அவர், தனது நேரத்தை அரட்டையில் கரைக்கவில்லை. வியூகம் வகுத்தார். தனது ஆட்களைக் கட்டுப்பாடாக இயக்கினார். கடுமையாக எல்லாருமாக உழைத்தார்கள். பணத்தை எல்லா வகையிலும் வாரி இறைத்தார்கள். அதற்குரிய  பலனையும் அடைந்திருக்கிறார்கள். அதற்காக பணத்தை அள்ளிக் கொடுப்பது சரிதான் என்று நாங்கள் சொல்லவில்லை.

ஆர்.கே.நகர் தொகுதியில் இருக்கும் 50 வாக்காளர்களுக்கு ஒருவர், என தனது ஆட்களை நியமித்தார் தினகரன். அவர்கள் ஒவ்வொருவரும் தினசரி மூன்று வேளையாவது அந்த 50 பேரையும் சந்தித்துப் பேசவேண்டும். தங்கள் பக்கம் அவர்களை எப்படியாவது வளைத்துவிடவேண்டும் என்று அவர்களை உசுப்பியபடியே இருந்தார். தினகரன் நியமித்த ஆட்களும் தொகுதி வாக்காளர்களோடு இரண்டறக் கலந்தார்கள். பிள்ளைகள் படிப்புக்கு பணம் வேண்டுமா? அடமான நகை எதையாவது மீட்கவேண்டுமா? மருத்துவச் செலவுக்குப் பணம் வேண்டுமா?  என அவர்கள் வாக்காளர்களைத் தூண்டில் போட்டுப் பிடித்தார்கள். இதையும் நியாயம் என்று சொல்லவில்லை.

அதோடு தனக்காக வாக்குகேட்டு ஊர்வலமாகப் போனால் அவர்களுக்குப் பணம், ஆரத்தி எடுத்தால் பணம். வரவேற்று வாசலில் குக்கர் கோலம் போட்டால் பணம்... என எங்கும் பணம் எதிலும் பணம், எதற்கும் பணம், எல்லாவற்றிற்கும் பணம் என்று கரன்ஸியைத் தண்ணீராய் வாரி இறைத் தார்கள் தினகரன் ஆட்கள்.

அதுமட்டுமா? பிரச்சாரம் எல்லாம் ஓய்ந்த நிலையில், தனது ஆளான வெற்றிவேல் மூலம், ஜெ. மருத்துவமனையில் இருக்கும் வீடியோ என்று, ஒரு வீடியோ காட்சியை வெளியிடவைத்தார் தினகரன். தான் தேர்தல் கமிஷனில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று சர்வ ஜாக்கிரதையாக வெற்றிவேலை இந்த வேலைக்கு தினகரன் பயன்படுத்திக்கொண்டார்.

தினகரன் கணக்குப் போட்ட மாதிரியே, வீடியோ அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. ஆர்.கே.நகர் வாக்காளர்களை அதுவும் வசியம் பண்ண ஆரம்பித்தது.

வீடியோவில் உள்ளது உண்மையிலேயே ஜெயலலிதாதானா? அந்தப் படம் அப்பல்லோவில்தான் எடுத்ததா? என்று எல்லோரும் விவாதித்தபடி, அந்த வீடியோவிலேயே கவனத்தைத் திருப்பியிருந்த நேரத்தில், தொகுதியில் இருக்கும் 60 விழுக்காடு வாக்காளர்களுக்கு ஹவாலா முறையில் 20 ரூபாய் நோட்டு கொடுத்துவிட்டார்களாம் தினகரன் தரப்பினர்.

இப்படி திட்டமிட்டு, வியூகம் வகுத்து, ஓடியாடி பணத்தை பல வழிகளிலும் வாக்காளர்களிடம் சேர்த்துவிட்டார்கள் தினகரன் ஆட்கள்.  அதன் பலன்தான் இந்த வெற்றி.

குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரான தினகரனிடம், தி.மு.க., பா.ஜ.க. நிறுத்திய வேட்பாளர்கள் உட்பட 57 வேட்பாளர்களும் டெபாஸிட்டை இழந்துவிட்டனர். நோட்டோவிற்கு 2373 வாக்குகள் கிடைத்த நிலையில் அதைவிடக் குறைவாக, ஆளும் தேசியக் கட்சியான பா.ஜ.க. வெறும் 1417 வாக்குகளையே வாங்கி படுதோல்வி அடைந்திருக்கிறது.

பண வினியோகம் தொகுதியில் ஆறாகப் பாய்கிறது என்று தெரிந்தும், முறைகேடாக வீடியோ வெளியிடப்பட்டதைக் கண்டும், தேர்தலுக்கு முன்னதாக எல்லாவற்றையும் பா.ஜ.க. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது ஏன்?  மாநில  பா.ஜ.க. தலைவரான தமிழிசை, டெல்லிக்குத் தகவல் கொடுத்து தேர்தலை நிறுத்தியிருக்கவேண்டாமா? இப்போது பணநாயகம் வென்றுவிட்டது என்று கூக்குரல் எழுப்புவதால் என்ன ஆகப் போகிறது?

தினகரன் தில்லுமுல்லு பண்ணி ஜெயித்துவிட்டார் என்று  இப்போது வியாக்கியானம் பேசுகிறவர்கள், அந்தத் தில்லுமுல்லைத் தடுக்க ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை? அந்த தில்லு முல்லுக்கு ஈடுகொடுக்கக்கூட இவர்கள் ஏன் முயலவில்லை.

இதில் ஆளும்கட்சி பெற்ற தோல்வி மகா வெட்கக்கேடானது. ஒவ்வொரு ஓட்டுக்கும் ஆறாயிரம் ரூபாய் வீதம் பணம் கொடுத்துவிட்டோமே. அதனால் வாக்காளர்கள் நமக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள் என முதல்வர் ஈ.பி.எஸ்.சும்,  துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சும் மனப்பால் குடித்தார்கள். மற்றபடி அவர்கள் எந்தத் தெளிவான வியூகமும் வகுக்கவில்லை.

அரசு எந்திரம் நம்மிடம்தானே இருக்கிறது. போதாக்குறைக்கு இரட்டை இலையையும் மீட்டுவிட்டோம். இனி நம்மை மீறி என்ன நடந்துவிடும் என்று மமதையாய் இருந்தார்கள்.

கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்குப் போகும் பணத்தைத் தடுக்க, தேர்தல் பார்வையாளர்களையும் காவல்துறையையும் பயன்படுத்திக் கொண்டார்கள். இதனால் அவர்கள் சம்பாதித்தது வாக்காளர்களின் கோபத்தைத்தான்.

வீடியோவை தினகரன் தரப்பு வெளியிட்டதே... அதைப் பார்த்ததும் ஆட்சியில் இருப்பவர்கள் என்ன செய்திருக்கவேண்டும்?

இப்படியொரு வீடியோ வரப்போகிறது என்பதை, புலனாய்வுத்துறை கையில் இருந்தும் தெரிந்துகொள்ளாமல் கோட்டைவிட்டார்கள். வந்த பிறகாவது அது உண்மையான வீடியோதானா?
அதில் இருப்பது ஜெயலலிதாவா? அது மார்பிங் மேஜிக்கா? அது அப்பல்லோவில்தான் எடுக்கப்பட்டதா என்றெல்லாம் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆராய்ந்திருக்கவேண்டாமா?

அப்பல்லோவே தங்கள் கைவசம் இருக்கும்போது, அங்கே என்ன நடந்தது என்றுகூட அவர்கள் யாரும் விசாரிக்கவில்லை. வீடியோவின் தன்மையைத் தெரிந்துகொண்டு, அவர் கள்தானே அதை மக்களிடம் விளக்கி இருக்கவேண்டும்?

நாம் நக்கீரனில் தொடர்ந்து எழுதிவந்திருக்கிறோம். முதல்வராக இருந்த நிலையில்தான் ஜெ. இறந்துபோனார். 

அப்படியென்றால் அவரது சிகிச்சை குறித்த ஆவணங்களும் மரணம் குறித்த ரிப்போர்ட்டுகளும் அரசின் கையில்தானே இருக்கவேண்டும்? ஆனால், ஆட்சியில் இருப்பவர்களிடம் ஜெ. பற்றிய எந்த ஆவணமும் இல்லை.

இப்படி பதவி இருந்தபோதும், அதைத் திறமையாக நிர்வகிக்கத் தெரியாததால்தான் இப்போது எடப்பாடியும்  ஓபி.எஸ்.சும் ஆர்.கே.நகரைக் கோட்டை விட்டுவிட்டு கைபிசைகிறார்கள். தினகரனின் வெற்றி, ஆட்சியையே கைப்பற்றிவிடுமோ என்று நடுங்குகிறார்கள்.

இந்த தோல்வி சாதாரணத் தோல்வி இல்லை.

தி.மு.க.வும், ஆளுங்கட்சியும் இதை எளிதில் கடந்துவிட முடியாது. இந்த ஒரு இடைத்தேர்தல் தி.மு.க.வின் இமேஜையும் ஆளுங்கட்சியின் இமேஜையும் ஒருசேர சாய்த்திருக்கிறது.

ஏற்கெனவெ ஜெ. போட்டியிட்டபோது, அவரை எதிர்த்து தி.மு.க., அங்கே  தனித்து நின்று வாங்கிய 57,673 ஓட்டுக்கள் இப்போது எங்கே போனது? இந்தமுறை இத்தனை கூட்டணிக் கட்சிகள் இருந்த நிலையிலும், 24,651 வாக்குகளை மட்டுமே தி.மு.க. வாங்கியிருக்கிறது. மிச்சம் 33 ஆயிரத்து சொச்சம் வாக்குகள் எங்கே போனது?

இதையெல்லாம் ஆராயவேண்டும். கப்பலில் எங்கே ஓட்டை இருக்கிறது என்று தெரிந்துகொண்டு அதை அடைக்கவேண்டும். இதற்கிடையில் ஊடு பாய்கிறார் அழகிரி. அவரும் எதுடா சாக்கு என்று இருந்திருப்பார் போல.

அவர் இந்தளவு பேச இடம் கொடுத்தது தி.மு.க.வின் தவறு.

ஆளுங்கட்சியினராவது நாளை தினகரனுடன் கைகோர்த்து ஒரே அணியினராக மாறலாம். அவர்களுக்கு வெட்கம் இல்லை என்பது டெல்லி வரை தெரியும். அவர்கள் இதே தினகரனையோ சசிகலாவையோ நாளை தலைவராக ஏற்றுக்கொண்டு அடிபணியலாம்.

ஆனால் தி.மு.க.வின் நிலை வேறு. எதிரிகள் எல்லாம் உதிரிகள் ஆன நிலையிலும், ஆர்.கே. நகரில் நோட்டா வாங்கிய ஓட்டுக்களைவிட மட்டமாய் வாங்கிய பி.ஜே.பி.யை விட்டுவிட்டார்கள். ஒரு சுயேச்சையிடம் கேவலமாக தோற்றுப்போன, அரசு இயந்திரத்தை கையில் வைத்து கோலோச்சிய இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.ஸையும் விட்டுவிட்டார்கள். ஊருக்கு இளைத்தவன் என்று தி.மு.க.வைப் பிடித்து உலுக்குகிறார்கள்.

இதற்குத் தேவை தி.மு.க.வுக்கு ஒரு வெற்றி.

ஆதங்கத்தோடு...
நக்கீரன்கோபால்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :