Add1
logo
Logo
இனிய உதயம்
சென்னிமலை தண்டபாணி
 ................................................................
எம்.ஜி.ஆர் தமிழரா?
 ................................................................
கண்களின் ஜல்லிக்கட்டு
 ................................................................
தமிழ் வானில் என் சிறகசைப்பு!-முனைவர் நா.நளினிதேவி
 ................................................................
லிங்குசாமி கவிதைகள்
 ................................................................
என்ன செய்யப் போகிறீர்கள்?
 ................................................................
01-01-2018ன் இளமைப் பருவம் வளமானதாக இல்லை. தந்தையின் கண்டிப்புக்கு எப்போதும் அச்சம். ஒதுங்கியே இருப்பேன். இளவயதிலிருந்தே கையில் புத்தகம்தான். அப்போதெல்லாம், அந்த மூன்று நாட்களில் புத்தகம் தொடக்கூடாது என்ற கட்டுப்பாடு! அந்தக் கட்டுப்பாட்டை உடைத்து அந்த நாட்களில் கல்கியின் "பொன்னியின் செல்வனை' இரண்டே நாட்களில் படித்து முடித்தேன். "கல்கி' இதழ் தொடங்கிய நாள் முதல் அதில் இடம் பெற்ற தொடர்கதைகளை தனியாகத் தைத்து வைத்திருப்பார் தந்தை. அரட்டை அடிப்பது, விளையாடுவது எதுவுமின்றிப் படிப்பது மட்டுமே. பட்டுப்பாவாடை கட்ட வேண்டும் என்ற கனவு இளமைப்பருவத்தில் நிறைவேறவே இல்லை. இப்போது பட்டாடையை நானே துறந்துவிட்டேன்.

மாணவப் பருவத்திலிருந்தே செய்தி இதழ்களுக்கு (அந்நாளைய தமிழ்நாடு இதழ்) எழுதத் தொடங்கிவிட்டேன். சமுதாயவியல் மிகவும் பிடித்த பாடம். அதில் எப்போதும் முதல் மதிப்பெண். மதுரையில் உள்ள தூய வளனார் பள்ளியில், அதன் தாளாளர் அன்னை ரோஸ் (அமெரிக்கர்) கட்டணம் வாங்காமல் படிக்க அனுமதி கொடுத்தார். தந்தையின், கல்வி ஆர்வம் கண்டு அவர் இதைச் செய்தார். புத்தகங்களுக்கு வண்ண (பிரவுன் கலர்) அட்டை போடவேண்டும் என்று பள்ளியில் கண்டிப்பு. அதை வாங்குவதற்கு வசதி இல்லை. கைவேலை வகுப்புக்கு உரிய துணிகள், பாசிகள் வாங்குவதற்கும் இயலாமல் பாதி நாட்கள் வகுப்பிற்கு வெளியேதான் நின்றிருக்கின்றேன்! அன்னை ரோஸ் தாயகம் சென்றுவிடும் நாட்களில் கட்டணம் கட்டாததற்காக, என்னைப் போன்ற பிறமாணவியருடன் ஓர் அறையில் அடைத்து வைத்துவிடுவார்கள். பெரும் செல்வர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் பள்ளி ஆதலால், அவர்களுக்கு இணையாக எனக்கு உடைகள் இல்லாமையால் தாழ்வு மனப்பான்மை! இதனால் விழா நிகழ்ச்சிகளுக்குப் போகமாட்டேன்.

பள்ளியில், தமிழுக்கு உரிய மதிப்பு இருக்காது. ஒரே ஒரு தமிழாசிரியர்.  கோனார் உரையைப் படிக்கச் சொல்லிவிட்டு, ஆசிரியைகளையும், மாணவியையும் சாடையாகக் கிண்டல் செய்துகொண்டிருப்பார். தமிழில் என் கருத்தை கோனார் உரை இன்றி சொந்தமாக எழுதுவேன். ஆசிரியர் பணியிலும் மாணவியரை கோனார் உரை வாங்கவே கூடாது என்று கண்டிப்பாக இருப்பேன். ஆனால் ஆசிரியர்களோ கோனார் உரை படித்துப் பாடம் கற்பிப்பார்கள்.

பாத்திமா கல்லூரி முதல்வர் என்னைத் தமிழ் இலக்கியம் படிக்க வேண்டாம். வேறு பாடம் படிக்குமாறு அறிவுறுத்தினார். நான் வீட்டில், தமிழ் தராவிட்டால் படிக்கவில்லை எனக் கூறிவிட்டேன். இதனால் சினம் கொண்ட அவர், முதுகலை படித்து வெளியேறும் வரை என்னை ஏதாவது சொல்லித் திட்டிக் கொண்டு, தமிழ் எடுத்து என் திறமையை வீணடித்து விட்டதாகக் கடிந்து கூறுவார்.

பள்ளியில், தமிழ் ஊடகம் படித்து விட்டுக் கல்லூரியில் ஆங்கில ஊடகம் பயின்றபோது ஓர் எழுத்துக் கூடப் புரியவில்லை. படிக்க மாட்டேன் என்று பிடிவாதம் செய்தேன். அப்பாவின் நண்பர், நியூ கல்லூரியில் ஆசிரியர். அவர் வந்து, "எல்லோருக்கும் இதே நிலைதான். நீ காலாண்டுத் தேர்வு எழுது. நான் வினா மாதிரிகள் அனுப்புகின்றேன். அப்படியும் படிக்க முடியவில்லை எனில் விட்டுவிடலாம்' என்று விளக்கிய பின்பு இசைந்தேன்.

தேர்வுக்கு எல்லாப் பாடங்களையும் ஒரு பிழைகூட இல்லாத வரை எழுதி எழுதிப் பார்த்ததில் வலது தோள் குழியில் மட்டைப் பந்து அளவிற்குக் கட்டி உருவானது. வலியோ வலி. வீட்டுக்கு விலக்கான நாட்களில் தனியே உட்கார்ந்திருக்கும் என்னை யாரும் தொடமாட்டார்கள். மேல் சட்டையும் கூடப்போட இயலாது. குடும்ப மருத்துவர் இல்லம் வந்து மின்சிகிச்சை அளிப்பார். அது முடிந்ததும் வலி இரண்டு மடங்காகும். வலியில் அலறுவது  வீதியில் கேட்கும்.பெரிய மருத்துவமனை செல்வதற்கு வசதி இல்லாதால், அப்பாவுக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் மிகச் சிறிய மருத்துவ அறையில் மேசையில் ஏசுநாதரைச் சிலுவையில் அறைந்து கிடத்தியதுபோல் படுக்க வைத்து, அப்பா கால்களைப் பிடித்துக்கொள்ள, மயக்க மருந்து இன்றி மருத்துவர் கட்டியை அறுத்தெடுத்தார்.

புதுமுக வகுப்பு முடிந்ததும் மருத்துவம் படிக்கவேண்டும் என்பது பெற்றோரின் தீராத ஆசை. அம்மா எப்போதும் நோயாளி ஆகையால் நான் மருத்துவம் படித்து குணப்படுத்த வேண்டும் என்று விரும்பினர். அப்போது மருத்துவப் படிப்பில் சேர்வதற்குப் பணம் கையூட்டாகக் கொடுக்க வேண்டியது இல்லை. மருத்துவ இயக்குநர் மரைக்காயர் என்பவர், தாத்தா சொன்னால் கேட்பார் என்றிருந்தும் அறுக்க வேண்டும் என்ற அச்சத்தால் மறுத்து விட்டேன். தாத்தா ஆங்கிலேயர் ஆட்சியில் கையூட்டு வாங்காத அலுவலர் என்ற பெயர் பெற்றவர். இதனால் அரசு அலுவலர்களிடையே அவருக்கு மிக மதிப்பும் மரியாதையும் இருந்தன. அவர்களில் பலர் சென்னையில் உயர் பணிகளில் இருந்தனர்.

வீரபத்திரபிள்ளை என்று மாவட்ட ஆட்சியர் தாத்தாவின் உறவு. இவருக்கும் இந்தப் பெயர் இருந்தது. திறமைக்கு மதிப்பளித்து அவர்கள் தாத்தாவின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்வர். ஆனாலும் நான் மறுத்துவிட்டேன்.

தூயவளனார் பள்ளித் தாளாளரே பாத்திமா கல்லூரியும் தொடங்கியதால்  புதுமுக வகுப்பு முடித்து இளங்கலைப் பட்டமும் பெற்றேன். மதுரைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பெற்றது. கல்லூரியில் தமிழ் முதுகலை தொடங்கினர்.

நாங்கள் ஐந்து பேரே முதுகலை பயின்றோம். வாரம் ஒரு நாள் தியாகராயர் கல்லூரியிலும் ஒரு நாள் மதுரைப் பல்கலையிலும் வகுப்புகள் நடைபெறும். இந்த நாட்களில்தான், அந்நாளைய தமிழ் அறிஞர்கள் பலரிடமும் படிக்கும் வாய்ப்பும் கிடைத்து.

இச் சமயத்தில்தான் தி.மு.க ஆட்சிக்கு வந்து அண்ணா முதல்வர் ஆனார். நெடுஞ்செழியன், மதியழகன் முதலானோர் கல்லூரிக்கு வரும்போது "தலைவா தவப்புதல்வா' பாடல்களும் நாகூர் ஹனிபா பாடல்களும் ஒலிக்கும். இசைக்கூட்டம் அரங்கிற்குள் நுழைய முடியாது. மதுரைப் பல்கலையின் முதல் பட்டதாரிகளாய் நாங்கள் திகழ, அண்ணா பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். அந்த நாட்கள் தமிழின் பொற்காலம் எனலாம். அ. சிதம்பரநாதன் (செட்டியார்) சென்னை கல்லூரியில் நெடுஞ்செழியன், மதியழகன் போன்றோரை தம் வீட்டில் வைத்துக் காவலர் கைகளில் அகப்படாமலே காத்தார் என்பதை அவர்களே அவருடைய மணி விழா மேடையில் விளக்கியபோது எங்களுக்கு மெய்சிலிர்க்கும்.

1960-களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நா. காமராசன். கா. காளிமுத்து முன்னிற்க, அவர்களுடன் நாங்களும் இணைந்து போராடியது மறக்க இயலாத நினைவுகள்!

இளங்கலையில் நன்னூல் இலக்கணத்தை மாணவியரே ஆசிரியரை எதிர்பாராது படித்துப் பொருள் தெளிந்தோம். இரண்டு கல்லூரிகளுக்கும் பாடம் கற்பிப்பதில் மலையளவு வேறுபாடு இருந்தாலும் தமிழ் உணர்வு, தமிழ்த்துறை ஆசிரியர்களிடம் நிறைந்திருந்தது. குறிப்பாகப் பேராசிரியர் சக்தி பெருமாள். தனித்தமிழில் உரையாடி எங்களையும் தனித்தமிழில் பேச வைப்பார். பிற துறை ஆசிரியர்கள் தமிழ் பேசிக் கேட்டதில்லை. தேர்வு எழுதியிபின் நோட்டை ஆசிரியர் அறையில் வந்து வாங்கிக்கொள்ளுமாறு கூறுவார். நாங்கள் சென்று "டெஸ்ட் நோட் வேண்டும்' என்று கூறுவோம். அவர் "என்னம்மா, என்ன வேண்டும் என்ன சொல்றீங்க' என்று கேட்டுக் கொண்டே இருப்பார் நாங்கள் தேர்வு ஏடு என்று சொன்ன பிறகே, தேர்வு ஏடு கேட்கிறீங்களா என்பார். வகுப்பில், நாம் கரங்களால் சாதம் சாப்பிடாது கையால் சோறு உண்போம் என்று பாடங்களுக்கு இடையே தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப் பயிற்றுவித்தார்.

இவரது பட்டிமன்றப் பேச்சு திறமையை ஏற்றுக்கொள்ள முடியாமல் குன்றக்குடி அடிகளார் இவரைப் பல முறை தாக்கமுயன்றதைக் கூறுவார். முயலுக்கு மூன்றுகால் தவறு. எப்படி மூன்றுகால் என்று உறுதி செய்வது என்று 10 மணித்துளிகள் பேசிக்காட்டுவார். எங்களுக்கு முயலுக்கு மூன்று கால்தான் என்ற நம்பிக்கையே வந்துவிடும்.

பல்கலைக்கழகத்தில் மெ. கருதாம் என்ற ஆசிரியர் மொழி வரலாறு பாடம் எடுக்கும்போது தி.மு.க. கூட்டணி, அண்ணா, கருணாநிதி, காங்கிரஸ் கட்சி முதலானவர்களை உட்பொருளாக வைத்தே பாடம் நடத்துவார். இன்று அந்த தி.மு.க.வும் தலைவர்களும் இல்லை. தமிழுக்காக அவர்கள்பால் அளவற்ற பற்றுக்கொண்ட ஆசிரியரும் இல்லை. தி.மு.க ஆட்சிக்கு வராமல் இருந்திருந்தால் தமிழ் இன்னும் செழிப்பற்றிருக்கும். இன்றைய தலைவர்கட்கு அத்தகைய தமிழறிவும் தமிழ்ப்பற்றும் இல்லை என்பது தமிழுக்குப் பேரிழப்பே.

மறக்கமுடியாத ஆசிரியர்கள்அனைவருமே மறக்க முடியாதவர்களே.

குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட திருமிகு கலா டாக்கர் இப்போது சென்னையில்தான் உள்ளார். பாடப்பகுதி இல்லாவிடினும், குறள் போன்றவற்றை மனப்பாடம் செய்து வரச் சொல்லித் திருத்துவார். பல பாடல்கள் எங்களுக்கு மனப்பாடமாயின. திருமிகு சக்திப் பெருமாள், மனோன்மணியம் நாடகத்தின் சிறந்த பகுதிகளை குறித்துக் கொடுத்து மறுநாள் வகுப்பில் எழுதச் சொல்வார். பொது வகுப்பில் இருநூற்றுக்கு மேல் இருப்போம். ஒருவரையொருவர் திருத்தச் சொல்லிப் பிழைகளுக்கு மதிப்பெண் குறைக்க கூறிப் பிழை இன்றி எழுதிப் பத்துக்கு எட்டுவரை வாங்கியவரை நிற்கச் செய்து பாராட்டுவார். இதனால் பிழை இல்லாமல் எழுத வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது. மனோன்மணியம் நாடகம் நிறைவு விழாவில் மனோன்மணி புருஷோத்தமன் போல இருவருக்கு வேட்டுத் திருமண விழா நடத்தி வைத்தார். மனோன்மணியம் இன்றும் நினைவில் உள்ளது.

திருமிகு இராஜம் மலையாளி. மிகவும் கண்டிப்பானவர். பொதுக்கட்டுரை எழுதும்போது, எவ்வாறு எழுதுவது என்று எனது ஏட்டைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுமாறு மற்றவரைக் கூறுவார். வேற்றுமொழி கலந்து பேசினால், எழுதினால் என்ன என்று, வகுப்பில் பாட நேரம் முடியும் வரை என்னுடன் வாதாடுவார். 90 வயது கடந்த அவர் என்னை நினைவில் வைத்து இல்லம் வந்து பார்த்துச் சென்றார்.

அவரால் மடல் எழுத இயலவில்லை. தமிழ் மறந்துவிட்டதாம். கடவுள் நம்பிக்கை இல்லாமல்போன என்னிடம், தேவாரம், திருவாசகம் எல்லாம் பொய்யா எனக் கேட்டு வந்திருந்தார். எரிவாயு உருளையை மூடாமல் வைத்திருப்பது கூடாது எனக் கண்டிப்புடன் பழைய நாள் ஆசிரியர்போலவே அறிவுறுத்தினார்.

திருச்சூரில் மிகவும் முதுமையுற்று இருக்கின்றார். என்மீது ஏனோ மட்டற்ற அன்பு கொண்டவர்.  எப்போதும் என்னிடம் சிரித்த முகத்துடன் கண்களில் ஏதோ செய்தி கூறிக்கொண்டிருப்பார். கண்டிப்பால், மாணவியிருக்கு "சிம்ம சொப்பனமான' இவர் முதுகலை பயிலும்போது தேர்வு எழுதிக்கொண்டிருக்கும் மாடிக்கு வந்து எங்கள் அய்ந்து பேரையும் அருகில் வந்து மெதுவாக அழைத்துக் கீழே வருமாறு கூறினார். நாங்கள் என்னவோ ஏதோ என்று அஞ்சிக் கொண்டு இறங்கி வந்தோம். கல்லூரியின் முன்வராந்தாவில் ஜெமினி கணேசனும், சாவித்திரியும். கல்லூரியில் படிக்கும் தம் உறவுக்காரப் பெண்ணைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தனர். கூட்டம் சேர்வதற்குள் அந்தப் பெண்ணையும் எங்களையும் அழைத்து வந்து அவர்களுடன் பேச வைத்தார். இளமைப் பருவத்தில் திரைப்பட நடிகர்களைப் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கும்தானே. கூட்டமே இல்லாமல் மிக அண்மையில் அவர்களுடன் உரையாடியது பசுமையான நினைவு. ஒருபுறம் அத்துணைக் கண்டிப்பானவர். எவ்வாறு, ஏன் இதைச் செய்தார் எனப் பார்க்கும்போது கண்டிப்பு மாணவியரை நெறிப்படுத்தவே என்பது புரிந்து மெய்சிலிர்த்தது.

கல்லூரியில் ஆசிரியர்கள் அறை இருக்கும் வராந்தாவில்கூட மாணவியர் நடக்கக்கூடாது. ஆசிரியர்கள் வகுப்பு நேரத்தில் தவிர மாணவியருடன் பேசுவதில்லை. தமிழ்த்துறை ஆசிரியர் மட்டுமே மாணவியரிடம் பேசுவர். வகுப்பல்லாத நேரத்தில் பேசக்கூடாது என்ற கண்டிப்பு. இந்த விதியை மீற முடியாமல் திருமிகு. இராஜம், ராஜலட்சுமி, ஞானம் என்னுடைய தமிழ்ப்பற்றால் குறிப்பாகத் தனித்தமிழ்ப் பற்றால் என்பால் அன்புற்று, என்னுடன் பேச விரும்புவது அவர்களின் கண்களில், முகங்களில் தெரிவதை உணர்ந்துகொள்வேன். அந்த முகங்கள் இன்னும் என்னால் மறக்க முடியாதவை. உடன் பயின்ற மாணவித் தோழியர் அறியாத ஒன்று இது.

திருமிகு சண்பகம்! தமிழ் மாணவியர் நாங்கள் 5 பேர் இருப்பதால் எங்களுக்கென்று வகுப்பறை தனியாகத் தர மாட்டார்கள். மாடிப்படிகள் இருக்கும் இடத்தில் உள்ள சிறு பகுதியில் வராந்தாவில்தான் எங்களுக்கு வகுப்பு. நாங்கள் நெடுநல்வாடை பாடம் படிக்கும்போது மழை நாட்கள் (கார் காலம்). மழைச் சாரல், எங்கள் மீது தெறிக்கும். கதவு இல்லாததால் குளிரும். தாவணி முந்தானையைத் தோலில் கழுத்தை சுற்றி போர்த்திக்கொண்டு, பாட்டில் வருவதுபோலவே நடுங்கிக் கொண்டே படித்தது இன்றளவும் மறக்கமுடியாத நினைவு. இயற்கையுடன் ஒன்றிய பாடம் இன்றும் மனப்பாடம்.

இவர் நகைச்சுவையுடன் பாடம் எடுப்பார். பொது நூலகத்தில் சில சமயம் வகுப்பறை கொடுக்கப்படும். சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகிக் கொண்டே படிப்போம். தமிழ் வகுப்பு தவிர வேறு எந்த வகுப்பிலும் ஆசிரியர் தமிழே பேச மாட்டார்கள் ஆகையில், நாங்கள் இவ்வாறு ஆசிரியருடன் வேறுபாடு இல்லாமல் பேசிப் பழகிப் படிப்பது நூலகத்துக்கு வருவோருக்கு வியப்பாகவும் ஏக்கமாகவும் இருக்கும்.

திருமிரு. சரசுவதி விஜய வேணுகோபாலன் இவரும் திருமிகு சண்பகமும் வகுப்புத் தோழியர். இருவரும் ஒரே மாதிரியாக கையெழுத்து எழுதிப் பழகியவர்கள். யாருடைய கையொப்பம் எனக் கண்டுபிடிக்கவே முடியாது. இவர் மிகுதியாகப் பேசமாட்டார்.

திருமிகு இராசலட்சுமி சென்னைத் தமிழ் பேசுவார். என்ன காரணத்தாலோ என்மீது மட்டற்ற அன்பு கொண்டவர். ஒப்பிலக்கணம் குறிப்புகள் கொடுப்பார். நான் தேர்வில் வேகமாக எழுதுவதற்காக வானொலியில் திரைப்பாடல் ஒலிக்கும்போது அதை எழுதிப் பழகுவேன். அப்போதெல்லாம் தேர்வில் எத்தனை பக்கங்கள் எழுதுகிறோம் என்பது பெருமை! இதற்காக இவ்வாறு எழுதிப்பழக ஆசிரியர்தான் அறிவுறுத்தினார்.

அவர் சொல்லி முடிக்கும் முன்பு இப்படித்தான் இருக்கும் என்று  தெரிந்து. எழுதிவிடுவேன். மற்ற நால்வரும் மெதுவாக எழுதும்போது, நான் எழுதாமல் இருப்பதைப் பார்த்து ""எழுதியாச்சா'' எனச் சைகையால் கேட்பார். நானும் அவ்வாறே "எழுதிவிட்டேன்' எனத் தலையசைப்பேன். கல்லூரி விழாவில் பரிசு வாங்கும்போது இருட்டில் என்னைத் தேடி வந்து பாராட்டுவார். சென்னை செல்லும்போதெல்லாம் இவருடைய இல்லம் செல்வேன். இப்போது எங்கு இருக்கிறார் எனத் தெரியவில்லை. பாசம் மிகுந்த இவரது குரல் இன்றும் என் செவிகளில்!

மறைந்த  ஸ்ரீபால் அவர்களது  தங்கை திருமிகு சுனந்தா தேர்வுத் தாளில் பத்துக்கு ஒன்பதுக்கு குறைத்துப் போட மாட்டார். மிகமிக நன்று என எழுதி ஊக்கப்படுத்துவார். ஆசிரியர் என்ற பந்தா இன்றிப் பழகுவார்.

திருமிகு ஞானம் அவர்களும் என்னிடம் பேரன்பு கொண்டவர். என்னிடம் தனியாகப்பேச வேண்டும் என்று விரும்புவார். பாத்திமா கல்லூரி தொடங்கியதில் இருந்து பணியாற்றிய ஆசிரியர்களுக்கும், புதிதாக வருபவர்களுக்கு எப்போதும் ஆவதே இல்லை. என்னவோ புதியவர்கள் மாணவியராகிய எங்களிடம் நெருங்கிப் பழகுவர். கல்லூரி நாட்கள் முடிந்து கோடை விடுமுறையில் ஊர் செல்லும் முன்பு திடீரென்று என் இல்லம் வந்த அவர், வீட்டில் பேச விரும்பாமல், வீட்டில் அனுமதிபெற்று வெளியே என்னை அழைத்தார். வெளியே நின்று எங்கே பேசுவது? எனவே அருகில் இருந்த சிந்தாமணி திரையங்கில் நுழைந்து, தில்லானா மோகனாம்பாள் பார்த்துக்கொண்டே பேசினோம். அடுத்த ஆண்டு கல்லூரிக்கு வரமாட்டேன். எனவே, உங்களுடன் பேசிவிட்டுப்போக வந்தேன் என்றார் அவர். யாரோ இதைப் பார்த்து வீட்டில் சொல்லிவிட என்

அம்மா! "வாத்தியாரம்மாவே பொய் சொன்னால், மாணவியர் எப்படி உருப்படுவர் வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் மறைமுகமாக சுட்டிக் காட்டித் திட்டுவார்.

அன்புக்கு ஏங்கிய ஆசிரியர் ஒருவரின் உள்ளத்தை அம்மாவுக்கு  என்னால், கடைசி வரை புரிய வைக்க முடியவில்லை இப்போது எங்கு இருக்கிறார் என்பதும் தெரியவில்லை.

(சிறகுகள் அசையும்)தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :