Add1
logo
Logo
இனிய உதயம்
சென்னிமலை தண்டபாணி
 ................................................................
எம்.ஜி.ஆர் தமிழரா?
 ................................................................
கண்களின் ஜல்லிக்கட்டு
 ................................................................
தமிழ் வானில் என் சிறகசைப்பு!-முனைவர் நா.நளினிதேவி
 ................................................................
லிங்குசாமி கவிதைகள்
 ................................................................
என்ன செய்யப் போகிறீர்கள்?
 ................................................................
01-01-2018
ங்கள் ஈங்கூர் வீதியில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் வேப்பமரம். வாகனங்கள் பெருகி வழிந்தோடாத காலகட்டம். மிதிவண்டிகள்தான் கிண்கிணி ஒலியெழுப்பிப் போய்க்கொண்டிருக்கும். நெசவாளத் தோழர்கள் மர்பி வானொலிப்பெட்டியைத் தங்கள் வாகனத்தில் கட்டிக்கொண்டு திரையிசையைக் கேட்டுக்கொண்டே போய்க்கொண்டிருப்பார்கள். அந்த வேம்பின் நிழலில் தங்கள் வேர்வையைத் துடைத்துக்கொண்டு சற்று நேரம் இளைப்பாறிவிட்டு பாட்டை முணுமுணுத்துக்கொண்டே பறப்பார்கள். ஊசிமணி பாசிமணி விற்கும் எளிய நாடோடி மக்களுக்கு அந்த வேப்பமரம்தான் கூடாரம். சில நாட்கள் தங்கியிருந்து இடம்பெயரும் அவர்களின் தோள்களில் தொங்கிக்கொண்டிருக்கும் சிறிய வானொலிப் பெட்டி. இலங்கை வானொலியின் திரையிசைப் பாடல்கள் அவர்களைத் தித்திக்க வைத்துக் கொண்டிருக்கும். அந்தப் பாடலுக்கேற்ப அவர்கள் ஆடுவதும் பாடுவதுமாகப் பொழுது போய்க்கொண்டிருக்கும். அவர்களின் உள்ளத்திற்குள் குடியிருந்தவர் மக்கள் திலகம் என்பதை அவர்களின் கொண்டாட்டமே காட்டிக்கொடுத்துவிடும். காற்றில் தவழ்ந்துவரும் பாட்டிற்கேற்ப அவர்கள் ஆடும் ஆட்டத்தை வேடிக்கை பார்க்கவும் சிறு கூட்டம் கூடும். அதைப்பற்றி அவர்கள் அக்கறைப்பட்டதில்லை.

ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலேதான் சுகம்..சுகம்..சுகம்..
ஆசைதரும் பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும்.வரும்..!’’
என்று தொடங்குகிற பாடல்
விம்மிவரும் அழகில் நடைபோடு!
வந்திருக்கும் மனதை எடையோடு!
வேண்டியதைப் பெறலாம் துணிவோடு!-உன்
பாதையில் நான் ஊர்வலம் வருவேன்
புதுமையை நீ பாடு..!

என்று முடியும். அந்தப் பாட்டிற்கும் ஆட்டத்திற்கு மாகவே பலர் அவர்களிடம் ஊசிமணி, பாசிமணி, நரிப்பல், யானைமுடி என்று எதையாவது வாங்கிக் கொண்டு நகர்வார்கள். வீட்டிலிருப்பவர்கள் பழைய சோறு இருந்தால் கொண்டுவந்து அவர்களுக்குக் கொடுப்பார்கள். இப்படி அந்த மக்களின் இதயத் துடிப்போசையாகப் பாடலைப் புனைந்த கவிஞர்தான் ஆலங்குடி சோமு.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகில் ஆலங்குடி கிராமத்தில் 12.12.1932-ல் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த சோமு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் மூன்றாவது வகுப்புதான் படித்தார். "தந்தையொடு கல்விபோம்' என்பதுபோல் தந்தை இறந்தவுடன் கல்வி அவரைவிட்டுக் கைவிட்டுப்போனது. வறுமையிலிருந்து முட்டி மோதி வெளியேவருவதற்காகத் தன் தாயோடும் சகோதரர்களோடும் சேர்ந்து விவசாயம் செய்தார். பதினெட்டு வயதில் மிதிவண்டிக் கடையையும் சிற்றுண்டிக் கடையையும் நடத்தி வந்த அவருக்குள் கவிதையின் நர்த்தனம். விளிம்புநிலை மக்களை மேடேற்ற அவர் எழுதிய நாடகங்களுக்கு அவரே பாடல் எழுதினார். பெண்வேடமிட்டு நடித்தார். நாடகங்களில் தன் பாடலுக்குத் தன் அண்ணனையே பாட வைத்தார். திரைத்துறைக்குப் போய்விடு என்று நண்பர்கள் கூட்டம் திரியைக் கொளுத்திப் போட்டது. பாசத் தாயிடம் தன் ஆசையைச் சொன்னபோது திருமணத்தை முடித்துக்கொண்டு திரைத்துறைக்குப் போ என்றதும் அத்தை மகள் காளியம்மாள் அன்பு மனைவியானார். ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள்.

திசையறியாத சென்னை வாழ்க்கையில் 1952-ல் அவருக்கு திசைகளை அறிமுகம் செய்து வைத்தவர் கவிஞர் புரட்சிதாசன். வாய்ப்புகளைத் தேடி அங்குமிங்குமாக அலைந்த சோமுவுக்கு சின்னப்பதேவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் தன்னுடைய “யானைப்பாகன்’’ (1960) படத்தில் சோமுவை அறிமுகப்படுத்திவைத்தார். முதல் திரைப்பாடல்

ஆம்பிளைக்கு பொம்பள
அவசியந்தான்- இதிலே
அடங்கிக் கிடக்கு ஆயிரம் ஆயிரம்
ரகசியந்தான்..ரகசியந்தான்..
என்று தொடங்கியது. அந்த முதல் பாடலிலேயே
காம்பில்லாத கோடாலி
காரியத்துக்கு உதவிடுமா?
சாம்பிராணி யானாலும்
நெருப்பில்லாம புகஞ்சிடுமா?

என்று கேட்டார். அதன்பின் ஓராண்டு கழித்து 1961-ல் வெளிவந்த கொங்கு நாட்டுத் தங்கம்’’ படத்திற்கு எழுதிய பாடலில்

மானைத் துரத்தி வந்து கானக் குறத்தி வள்ளி
மாதைக் கவர்ந்து மணம் கொண்டவா! -சூரர்
மார்பைத் துளைத்து வெற்றி கண்டவா!-மெய்
ஞானக் கருத்தை தந்தை காதிற் புகன்று அருள்
மோனப் புன்னகை செய்து நின்றவா!-உன்னைக்
காணத் திரண்டு வந்தோம் மன்னவா!

என்று தமிழால் விளையாடினார்.

கவிஞரைப் பற்றி நடிகர் அசோகன் மக்கள்திலகத்திடம் சொல்லியிருந்தார். ஒருநாள் மக்கள்திலகம் கவிஞரை அழைத்துப் பாடச்சொன்னார். பதினோறு பாடல்களை உடனடியாகப் பாடினார் கவிஞர். பாடல்களைக் கேட்ட அவர் அத்தனை பாடல்களையும் எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ்க்காக வாங்கிக் கொள்வதாகச் சொல்லி உரிய பணத்தை அடுத்தநாளே தந்துவிட்டு இரண்டு பாடல்களை உடனடியாகப் பதிவுசெய்யச் சொல்லிவிட்டார்.  அதன்பின் அவருடைய படங்களுக்குத் தொடர்ந்து எழுதினார். "காஞ்சித்தலைவன்' படத்துக்கு ஆறுபாடல்களை எழுதினார். அதில்

ஒரு கொடியில் இருமலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவுமுறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா..

கருமணியின் துயரம் கண்டு இமைகள் தூங்குமா-அண்ணன்கண்ணீரில் மிதந்திட என் இதயம் தாங்குமா?

என்று எழுதினார். இந்தப் பாட்டு அவரை உச்சியில் கொண்டுபோய் உட்கார வைத்தது. மனைவி காளியம்மாளை மரணம் கவ்விக்கொண்டு போக, இரண்டு குழந்தைகளோடு என்ன செய்வது என்று திகைத்த கவிஞருக்கு இரண்டாவது மனைவியானார் சரஸ்வதி. இவருக்கும் இரண்டு குழந்தைகள். அனைவரோடும் தேனாம்பேட்டையில் வாழ்ந்தார் கவிஞர். பாட்டுப்பயணமும் தொடர்ந்தது. சொந்தப் படம் எடுத்துக் கைகளைச் சுட்டுக் கொண்ட கவிஞர்கள் நிறையப் பேர் திரையுலகில் உண்டு. சோமுவும் அதற்குள் அகப்பட்டுக்கொண்டார். பத்தாம்பசலி, வரவேற்பு, மாதங்களில் அவள் மார்கழி என்று படங்களை எடுத்தார். எதிர்பார்த்த வெற்றிகளை எட்டாத அவர் பக்கவாதத்தில் படுத்தார். பத்தாண்டுகாலம் உடல்நலம்கெட்டு 6.6.1990-ல் உதிர்ந்து போனார்.

மூன்றாம் வகுப்போடு பள்ளிக்கல்விக்கு முற்றுப் புள்ளியிட்ட கவிஞருக்குள் எப்படி இந்தக் கவிவெள்ளம் கரைபுரண்டோடியது என்பதை எண்ணிப்பார்த்தால் வியப்புதான் விழிகளை விரிய வைக்கும். இயற்கை, தாய்மை, தத்துவம், காதல், மானுடம், பொதுவுடைமை, மொழிப்பற்று, கழகப்பற்று என்று அவர் திரையிசைகளில் தன் கருத்துக்களைத் தெளித்திருப்பதை, அதுவும் எளிய சொற்களில் எவருக்கும் புரியும் வண்ணம் எழுதியிருப்பதைக் காணும்போது ஆலங்குடிக்குள் கவிதை குடியிருந்ததைக் கண்டுகொள்ள முடியும். தாய் மீது அளவற்ற பாசம் கொண்டவர் கவிஞர். மக்கள்திலகத்தின் "அடிமைப்பெண்' படத்திற்கு ஒரு குறிப்பிட்ட சூழலுக்குப் பாடல் தேவையென்றதும் பல கவிஞர்கள் எழுதினார்கள். நாற்பத்து மூன்று பாடல்கள் சேர்ந்துவிட்டன. ஒவ்வொரு பாடலாக மக்கள்திலகம் படித்துக் கொண்டேவருகிறார். ஒரு பாடல் அவர் உள்ளத்தைக் கிள்ளிக்கொண்டது. அந்தப் பாடல் ஆலங்குடியார் எழுதிய பாடல்தான். அந்தப் பாடல் பல அர்த்தத் தளங்களில் ஒலிக்கும் பாடல்.

தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னைக் காக்கின்றாள்
என்று தொடங்குகிற பாடல்
தூய நிலமாய்க் கிடப்பாள்-தன்
தோளில் என்னைச் சுமப்பாள்
தன்மையில்லாமல்-நான் மிதித்தாலும்
தாய்மையிலே மனம்கனிந்திடுவாள்
என்ற கருத்தோடு
ஆதி அந்தமும் அவள்தான்-நம்மை
ஆளும் நீதியும் அவள்தான்
அகந்தையை அழிப்பாள்.. ஆற்றலைக் கொடுப்பாள்
அவள்தான் அன்னை மகாசக்தி
என்று முடியும். மகாகவி பாரதி பாடு என்றதும் புரட்சிக்கவிஞர்
எங்கெங்கு காணினும் சக்தியடா- தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா

என்று எழுதினாரே அப்படிப்பட்ட பாடலாக இந்தப்பாடல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. அதற்கும் முன்பே 1965-ல் வெளிவந்த "எங்க வீட்டுப் பெண்' என்ற படத்தில்

இயற்கை அன்னை தந்ததெல்லாம்
எல்லோர்க்கும் சொந்தமடா!
எனது உனது என்பதெல்லாம்
இடையில் மாறும் பந்தமடா..!

என்றும்

உனக்குமுன்னே பிறந்த நிலம்
ஊருக்கெல்லாம் கொடுத்த நிலம்
உனக்குப்பின்னும் இருக்குமடா!
உரிமையென்றால் சிரிக்குமடா!

என்று எழுதினார். இதை அறியாமல்தான் ஊரை ஏய்த்துக் கோடிகோடியாக் குவித்தவர்களின் மரணம்கூட மரியாதைக்குரியதாக இல்லாமல் போய்விடுகிறது. இதை உறுதிப்படுத்துகிறவர்போல ஆலங்குடியார்

நான் என்ற அகந்தையினாலே
நன்மை கண்ட மனிதரில்லை..
நாம் என்ற ஒற்றுமை வந்தால்
நாட்டினிலே துயரமில்லை’’

என்று எழுதியிருக்கிறார். இன்னும் தீர்க்கமான சிந்தனையோடு 1963-ல் வெளிவந்த "காஞ்சித்தலைவன்' படத்திற்காக எழுதினார்.

மக்களொரு தவறு செய்தால்
மாமன்னன் தீர்ப்பளிப்பான்
மன்னவனே தவறு செய்தால்
மாநிலத்தில் யார் பொறுப்பார்?
என்று கேட்டுவிட்டு
நினைத்து வந்த செயலொன்று
நடந்து போன கதையொன்று
நீதி தேவன் காலடியில்
வீழ்ந்துவிட்டேன் நான் இன்று..
என்று  நிலைமையைச் சொல்லி
முறைகெட்ட மன்னனுக்கு முடியெதற்கு?
நெறிகெட்ட நெஞ்சிற்கு நினைவெதற்கு?
கறைபட்டுப் போன இந்தக் கரமெதற்கு?
இந்தக் கரமெதற்கு?
என்று எழுதியதோடு 1968ல் வெளிவந்த "கணவன்' படத்தில்
அடிக்கடி மாறும் மனிதர்கள் கூறும்
அறிவுரை செல்லாது-இங்கு
அடைக்க வேண்டியவர் கணக்கை எடுத்தால்
சிறையே கொள்ளாது

என்றும் எழுதினார்.

இந்தப் பாடல்களின் வரிகளை அப்படியே இன்றைய  நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ஆலங்குடியாரின் சிந்தனை எப்படிச் சிறகடித்திருக்கிறது என்பதைக் கண்டுகொள்ள முடியும்.

ஆலங்குடியார் கழகப் பற்றாளர். கட்சிக்காக கொள்கை விளக்கப் பாடல்கள் எழுதியவர்.

அண்ணா, கலைஞர், மக்கள் திலகத்தின் மேல் ஈடுபாடு கொண்டவர். 1967-ல் கழகம் ஆட்சியைப் பிடிக்கிறது. அறிஞர் அரியணை ஏறுகிறார்.. இதை 1968-ல் வெளிவந்த "கணவன்' படத்தில் அதிகாரம் செய்தவனோ ஆட்டத்தை முடித்தான்- இங்கேஅன்புவழி நடந்தவனோ நாட்டினைப் பிடித்தான்-இதுஉழைப்பவனின் பொற்காலம் உலக ஏட்டிலே-இனிஎத்தர்களின் வருங்காலம் குப்பை மேட்டிலேஎன்று பதிவு செய்தார். அண்ணாவின் புகழ்பெற்ற கருத்துதான் கத்தியைத் தீட்டாதே -தம்பி புத்தியைத் தீட்டு’’ என்பது. ஏன் அப்படிச் சொன்னார் அண்ணா என்பதை அன்றைய காலகட்டத்தைக் கொஞ்சம் திரும்பிப்பார்த்துச் சிந்தித்தால் தெரியும். சீமான்களும் செல்வந்தர்களும் பண்ணையார்களும் எளிய மக்களைப் படுத்திய பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. பெற்ற சுதந்திரத்தை தங்கள் வீட்டு முற்றத்தில் கட்டி வைத்திருந்த அவர்களை எப்படி எதிர்கொண்டார் அண்ணா? “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று தம்பிகளுக்கு அன்புக் கட்டளையிட்டார் அறிஞரின் கருத்தைக் கவிஞர் 1965-ல் வெளிவந்த "விளக்கேற்றியவள்' திரைப்படத்தில் ஏற்றிவைத்து எழுதினார்.

கத்தியைத் தீட்டாதே-உந்தன்
புத்தியைத் தீட்டு
கண்ணியம் தவறாதே-அதிலே
திறமையைக் காட்டு

என்று எழுதினார்.
அண்ணாவின் கருத்தை மட்டுமன்றி அவர் வாழ்ந்த எளிய வாழ்க்கையையும் முன்கூட்டியே சொல்வதைப்போலக் கவிஞர் எழுதியிருக்கிறார்.

கவிஞரின் பாடல்கள் தெளிந்த நீரோடை போல களிப்பூட்டக்கூடியது.  கரடுமுரடான சொற்கள் இருக்காது.

வேண்டாத சொற்களைக் கொண்டு பாடல் எழுதுவது பிடிக்காது. மூடியிருந்தாலும் மூடாததுபோல் இருக்க வேண்டும். சிலேடையாக இருக்கலாம். பச்சையாக இருக்கக் கூடாது. எந்தப் பாடலும் இலக்கிய அந்தஸ்தோடு இருக்க வேண்டும். சில பாடல்களைக் கேட்டால் எங்கோ படித்த சாயல் தெரிகிறது என்றால் அது படைப்பு ஆகாது. தொகுப்பாகும். பார்வையில் புதுமணம் இருந்தால் படைப்பிலும் புதுமை இருக்கும். பசு புல்லைத் தின்றாலும் கறவைக்கு நிற்கும் போது பாலைத்தான் தரும். புல்லைத் தராது. அதுபோல்தான் கவிஞர்கள் என்றார் ஆலங்குடியார். அதற்கேற்பவே அவருடைய பாடல்கள் அமைந்தன.

இரவும் பகலும்’’ என்றொரு திரைப்படம்.. 1965-ல் வெளிவந்தது. அந்தப் தலைப்புக்கு பாடல் எழுத வேண்டும். இயக்குநருக்கோ அந்தப் படத்தின் தலைப்பில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. கடற்கரையில் நடிகர் அசோகன், கவிஞர் புரட்சிதாசன், ஆலங்குடியார் மூவரும் அமர்ந்து சுண்டல் சாப்பிடுகிறார்கள். ஏதோ நினைவோடு சுண்டலைத் தின்று கொண்டிருந்த கவிஞர் மிளகாயைக் கடித்து விடுகிறார். காரம் தாங்கவில்லை. துடிக்கிறார். பக்கத்தில் இருந்த நடிகர் அசோகன் வேடிக்கையாக “மாங்காயும் இருக்கும் தேங்காயும் இருக்கும் ஏன் மிளகாயும் இருக்கும். சுண்டல் ஒன்னுதான்’’ என்கிறார். கவிஞருக்குச் சட்டென்று பொறிதட்டுகிறது. பாட்டுப் பிறக்கிறது.

இரவு வரும் பகலும் வரும்
உலகம் ஒன்றுதான்!
உறவு வரும் பகையும் வரும்
இதயம் ஒன்றுதான்
என்று தொடங்கும் பாடல்
பெருமை வரும் சிறுமை வரும்
பிறவி ஒன்றுதான்!
வறுமை வரும் செழுமை வரும்
வாழ்க்கை ஒன்றுதான்.!

என்று தொடர்ந்தது.

டி.ஆர்.பாப்பா இசையில் அந்தப் பாடல் திசையெங்கும் ஒலித்தது. அந்தப் படத்தின் அத்தனை பாடல்களையும் கவிஞரே எழுதினார்.

வாழ்வின் அடிமட்டத்திலிருந்து மேலெழுந்து வந்தவர் கவிஞர் என்பதால்தான் தன் அனுபவக் கருத்துக்களை வாய்ப்புக் கிடைக்கும்பொழுது திரைப்பாடல்களில் வாரி இறைத்திருக்கிறார்.

வாழ்க்கை என்றொரு பயணத்திலே-பலர்
வருவார் போவார் பூமியிலே
வானத்து நிலவாய்ச் சிலரிருப்பார்-அந்த
வரிசையில் முதல்வன் தொழிலாளி
என்கிறார். வாழும் விதத்தையும் கற்றுக் கொடுக்கிறார்.
சொல்லும் செயலும் ஒன்றாய் இருந்தால்
உலகம் பழிக்காது-பெருந்
தொல்லையில் சிரிக்கும் தைரியம் இருந்தால்
துன்பங்கள் நெருங்காது

என்கிற கவிஞர்

ஆபத்துக்கு உதவிசெய்தால் பாவமுமில்லை-வீண்
ஆணவத்தை வளர்ப்பதனால் லாபமுமில்லை
அன்புக்காக ஏங்குவதில் கேவலமில்லை-அதை
அறிந்தவர்க்குக் கொடுப்பதனால் கெடுதலுமில்லை’’

என்று விரிந்த வெளியில் பறக்கிறார். எத்தனை கோடி இன்பம் வைத்தாய்’’ என்று பாடிய மகாகவி பாரதி போல

இறைவன் எனக்கொரு உலகத்தைப் படைச்சு
இன்பத்தைக் குவிச்சு வச்சான்-அதில்
இருப்பதை யெல்லாம் ரசிப்பதற்காக
இளமையைக் கொடுத்து வச்சான்
என்கிறார். ஆனால் அதே நேரத்தில்
உழைச்சவங்க பொழப்புல-நீ
மண்ணப் போடக்கூடாது
இளைச்சவங்க முதுகுலநீ
குதிரை ஏறக்கூடாது..
அடுத்தவங்க கண்ணைப் பறிச்சி
கோலி ஆடக்கூடாது
ஆனை மேலே இருந்தாலும்
ஆட்டம் ஆடக்கூடாது

என்று எச்சரிக்கை செய்யவும் தவறவில்லை.

காதல் உணர்வுகளையும் மனநிலையையும் மிக நளினமாக எழுதியவர் ஆலங்குடியார். நசுங்கிவிடாத நாகரிகத்தைச் சொற்களில் கோர்த்துவைத்தவர். எப்படிப்பட்டது காதல் என்பதைகாதல் என்பது தேன்கூடு-அதைக்

கட்டுவதென்றால் பெரும்பாடு
காலம் நினைத்தால் கைகூடும்-அது
கனவாய்ப் போனால் மனம்வாடும்
என்கிற கவிஞர்
வெல்வட்டுப் பஞ்சணையும் முள்ளாய்த் தோன்றும்
விடியும்வரை தூங்காமல் கண்கள் கெஞ்சும்
சொல்வதற்கு முயன்றாலும் நெஞ்சம் அஞ்சும்
சுவையான கனவுதான் மனதில் மிஞ்சும்
என்று தமிழைக் கொஞ்சவிட்டு
எண்ணப் பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா?- உன்
இமைகளிலே உறக்கம்வர
கண்கள் மறுக்கின்றதா?’’
என்று மெதுவாகக் கேட்டு
கன்ன மேடையில் பந்தாடலாமா
காதல் வாரம் கொண்டாடலாமா
என்று துள்ளி
மார்கழிப் பனிபோல் உடையணிந்து-செம்
மாதுளங் கனிபோல் இதழ் கனிந்து
கார்குழலாளே இடையளந்து-நீ
காத்திருந்தாயா எனைநினைந்து..

என்றும் தன் பாடலில் காதல் உணர்வுகளைப் படரவிட்டுக் கொண்டேபோகிறார். இன்றைய பாடலாசிரியர்களுக்கு முன்னோடியாகப் பளிச்சென்று ஒளிவீசுகிறார் கவிஞர்.

உல்லாசத் தோட்டம் உருவாக்கும் கூட்டம்பாட்டாளி மக்களல்லவோ உருவத்தைப் பார்த்து உள்ளத்தை மதிப்பதுமாபெரும் தவறல்லவோ?

என்ற கேள்வியும் அத்தரிலே நித்தம் நித்தம் குளித்தாலும் -பட்டு மெத்தையிலே பூவிரித்துப் படுத்தாலும் அத்தனையும் ஒருநாள் முடிந்துவிடும்-ஏழை அவசியம் அப்போது புரிந்துவிடும் என்ற உண்மையும் எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

கவிஞர் 1960லிருந்து 1985 வரை திரையிசைப் பாடல் களை எழுதியிருக்கிறார். கால்நூற்றாண்டு காலத் திரைப்பட வரலாற்றில் எழுதப்பட்ட கவிஞரின் பாடல்கள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வரவேண்டும். சாதிச்செல்வாக்கோ, அரசியல் செல்வாக்கோ இன்றி எங்கோ ஒரு குக்கிராமத்தில் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு வந்த கவிஞர் திரையுலகம் என்கிற தந்திரபூமியில் தன் கால்பதித்தார் என்பதே பெருஞ்சாதனை.

“எண்ணிப் பாத்தா எத்தனை பைத்தியம்
  இங்கே இருக்குது-இதில்
என்னை மட்டும் பைத்தியமின்னா
  சிரிப்பா இருக்குது’’
என்று பாடிய கவிஞர்
வெள்ளி நிலா வானத்திலே
  வந்து போகுதடா-அது
வந்து போன சுவடு அந்த
  வானில் இல்லையடா
  வானில் இல்லையடா

என்றும் பாடிவிட்டுப் போய்விட்டார். ஆனால் ஆலங்குடி சோமு வந்து போன சுவடு காலத்தால் மறையாதது. கனிந்த பாடல்களால் நிறைந்திருப்பது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :