Skip to main content
சற்று முன்

குன்று தோறாடும் குமரனின் தரிசனம்

குன்று தோறாடும் குமரனின் தரிசனம்

muru
விக்கி
Sr.Editor
Submitted by acoadio on 25 October 2017

தமிழகத்தில் அறுபடை வீடுகள் என்று ஆறு முக்கியத் தலங்களில் முருகப் பெருமானை வழிபடுகிறார்கள். இவை தவிர ‘குன்று தோறாடல்’ என்ற தத்துவப்படி குன்றங்களின் மீதும் மலைகளின் மீதும் எழுந்தருளி விளங்கும் பெருமானாகவும் அவர் தரிசனம் தருகிறார். முருகன் குறிஞ்சி நிலத் தலைவன். எல்லா மலைகளுக்கும் தெய்வம். அப்படி குன்றுதோறும் குடியிருக்கும் குமரன் அருள்பாலிக்கும் திருத்தலங்கள் சிலவற்றைக் காண்போம் வாருங்கள்! திருத்தணி: ஐந்தாவது படை வீடான குன்றுதோறாடலில் மிகவும் விசேஷமானது திருத்தணிகை. இது அரக்கோணத்துக்கு வடக்கே 16 கி.மீ. தொலைவில் உள்ளது. திருத்தணி நகரின் நடுவே சுமார் 400 அடி உயரத்தில் தணிகை மலை அமைந்துள்ளது. 

அங்கே மலை உச்சியில் நான்கு பிராகாரங்களுடன் எழில் மிகுந்த ஆலயம் இருக்கிறது. தேவர்களது துயர் தீர்க்கும் பொருட்டு சூரபத்மனுடன் செய்த பெரும் போரும், வள்ளியைக் கரம் பிடிக்க வேடர்களுடன் செய்த சிறுபோரும் முடிந்து முருகப் பெருமானின் சீற்றம் தணிந்து அமர்ந்த தலமாதலால், இது தணிகை எனும் பெயர் பெற்றது. தேவர்களது அச்சம் தணிந்த தலம். அடியவர்களது துன்பம், கவலை, பசி, பிணி, வறுமை ஆகியவற்றை தணிக்கும் தலம் என்றும் பெயர் பெற்றதாகக் கூறுவர். மலையின் அடிவாரத்தில் சரவணப் பொய்கை உள்ளது. இந்த தீர்த்தம் குமரவேள் தனது சிவபூஜைக்காக வரவழைத்த கங்கா தீர்த்தம் என்று சொல்வார்கள். 

கருவறையில் திருத்தணிகைப் பெருமான் திவ்விய சுந்தர வடிவினராய், இடக்கரத்தைத் தொடையில் அமைத்து, வலக்கரத்தில் ஞான சக்தியான வேலைத் தாங்கி, வள்ளி  தெய்வானை, மயில் முதலியோர் இன்றித் தனித்து நின்று தரிசனம் தருகிறார். திருமால் ஆலயங்களைப் போன்று பக்தர்களின் தலையில் சடாரி வைத்து ஆசி வழங்குவது இக்கோயிலின் தனிச் சிறப்பு. இங்கு சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை. கந்த சஷ்டி விழா மட்டும் நடைபெறுகிறது.  சென்னிமலை : ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலிருந்து தெற்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது, சென்னிமலை. 1750 அடி உயரம் கொண்ட மலைக் கோயில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இது சிரகிரி, சிகரகிரி, மகுடகிரி, புஷ்பகிரி, சென்னியங்கிரி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. 

இந்தத் தலவரலாற்றை இயற்றியவர் சரவண முனிவர் ஆவார். இது 23 மான்மியங்களையும் 667 திருவிருத்தங்களையும் கொண்டதாகும். சென்னிமலை என்றாலே தலைமையான மலை என்று பொருள். இம்மலை 1300 படிகளைக் கொண்டதாகும். வாகனங்கள் செல்ல 4 கி.மீ. தூரம் தனிப் பாதையும் உள்ளது. ஆலயத்தின் நடுநாயகமாக சென்னிமலையாண்டவரின் திருச்சந்நதி உள்ளது. வலது கரத்தில் ஞான தண்டாயுதத்தை ஏந்தியபடி இடது கரத்தை இடுப்பில் வைத்தபடி பெருங்கருணை கொண்ட பேரழகனாக, பேரருளாளனாக பேரொளியுடன் காட்சி தருகிறார். சென்னிமலை ஆண்டவர் செவ்வாய் கிரகத்துக்குரிய அதிதேவதையாகும் சிறப்பைப் பெறுவது சென்னிமலையில்தான். கருவறையில் நடுநாயகமாக செவ்வாய் கிரகமாக அமைந்து மூலவரைச் சுற்றியுள்ள தேவ கோஷ்டங்களில் பிற எட்டு கிரகங்களும் இடம் பெற்றுள்ள சிறப்பு சென்னிமலையில் மட்டுமே உள்ளது. 

‘சஷ்டியை நோக்கச் சரவண பவனார்’ என்று துவங்கும் ‘கந்த சஷ்டி கவசத்தை’ உலகம் முழுவதும் முருக பக்தர்கள் மனமுருகிப் பாராயணம் செய்வதைக் காண்கிறோம். அதனை இயற்றிய தேவராய சுவாமிகள் பாப்பினி என்ற ஊரையடுத்த மடவிளாகத்தைச் சேர்ந்தவர். அவர் இயற்றிய இந்த அரிய ‘கவசம்’ சென்னிமலை ஆண்டவர் திருக்கோயிலில்தான் அரங்கேற்றப்பட்டது என்பது பெருமைக்குரிய செய்தியாகும். சென்னிமலை ஆண்டவர்மீது அற்புதமான ‘திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் முருகப் பெருமானிடம் படிக்காசு பெற்றார். பக்தர்கள் தங்கள் இல்லங்களில் நடைபெறும் மங்கள நிகழ்ச்சிகளைத் துவங்கிட, முருகனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து ‘சிரசுப்பூ’ கேட்டு நல்ல உத்தரவு கிடைத்த பின்புதான் மனநிறைவு அடைகிறார்கள்.

மருதமலை : கோவை மாநகருக்கு மேற்கே சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது மருதமலை. இங்கு மருதாசலனாக முருகப் பெருமான் கொலுவிருக்கிறார். பழனியைப்போல இங்கும் முருகன் வேல் ஏந்தி ஆண்டியாகவே திருக்கோலம் கொண்டிருக்கிறார். இந்த மலையில் மராமரம் என்ற மருத விருட்சம் மற்றும் அநேக மூலிகைச் செடிகளும் நிறைந்துள்ளன. அதனால் இதை ‘மருந்துமலை’ என்றும் அழைப்பதுண்டு. இங்கு மூர்த்தி விசேஷத்தோடு தீர்த்த விசேஷமும் உண்டு. இங்குள்ள ஆறு தீர்த்தங்களிலும் பக்தி சிரத்தையுடன் நீராடி, மருதாசலனைத் தரிசித்து வேண்டிக் கொண்டால் தீராத வினைகளும், பிணிகளும் தீர்ந்துவிடும் என்றும் நம்புகிறார்கள். பதினெண் சித்தர்களில் பாம்பாட்டிச் சித்தர் வாழ்ந்த இடம் இந்த மலை. அதனால் இதற்கு பாம்பாட்டிச் சித்தர்மலை என்ற பெயரும் உண்டு. வருடந்தோறும் தைப்பூச ரதோற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.

கபிலர்மலை: நாமக்கல் அருகே பரமத்தி வேலூரிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது, கபிலர்மலை என்ற முருகன் திருத்தலம். இங்கு அவர் குழந்தை குமார சுவாமியாகக் காட்சி தருகிறார். அவரது உருவம் ஞான வடிவானது. கலவைச் சந்தனமும் மார்பில் புரிநூலும் எழில் சேர்க்கின்றன. வேற்படையே அவருக்குரிய ஆயுதமாகக் கரங்களில் மிளிர்கிறது. மலையைச் சுற்றி காவிரிநதி ஓடுகிறது. மலைக் கோயிலில் முண்டிதம் செய்யப்பட்ட முடியுடனும் இடையில் கோவணத்துடனும், வேலாயுதத்துடனும் பெருமான் தோற்றம் கொண்டுள்ளார். இந்த வடிவம் பழனி ஆண்டவர் தோற்றத்தை ஒத்துள்ளது. 
சுருளி மலை: மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பிரிவான சுருளி மலை சிறந்த முருகன் தலமாகத் திகழ்கிறது. 

இங்குள்ள சுருளி தீர்த்தம் அருவியாக விழுகிறது இம்மலையில் இருக்கும் வனத்தில் மூலிகைகள் நிறைந்திருப்பதால் இங்கு நிலவும் குளிர்ந்த காற்று உடலுக்குப் புத்துணர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் தருகிறது. முருகப் பெருமானுக்கு இயற்கையாக அமைந்துள்ள கோயில்களில் சுருளிமலை குறிப்பிடத்தக்கது. இங்கு முருகப் பெருமான் குகையொன்றில் கோயில் கொண்டு விளங்குகிறார். இதற்குக் கீழே மற்றொரு குகையில் கைலாசநாதர் இருக்கிறார். இக் குகைக்கு ‘கைலாசப்புடவு’ என்று பெயர். சனி தோஷத்திலிருந்து தேவர்களைக் காக்க முருகன் இத்தலத்தில்தான் அவர்களுக்குத் தஞ்சம் கொடுத்ததாக தல வரலாறு கூறுகிறது. சனிக் கிரகத்தால் பாதிப்பு உடையவர்கள் சுருளி மலை சென்று தரிசித்தால் சுருளி மலை பாலமுருகன் அருளால் சுகம் பெறலாம். 

திண்டல் மலை: ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து கோவை செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவில் திண்டல் மலை அமைந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலம் திண்டல்மலை வட்ட வடிவமாகத் திகழும் அழகியமலை மீது வேலாயுதசுவாமி எழுந்தருளியுள்ளார். ஈரோடு பெருநகரைப் பார்த்தபடி ஈசான்ய மூலையில் அமைந்துள்ளது இத்திருக்கோயில் மூலவர் வேலாயுதசுவாமி வேலைப் பிடித்தபடி இடது கரத்தை இடுப்பில் வைத்தபடி காட்சி தருகிறார். இங்கு அரச மரத்தடி விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இடும்பன், தன்னாசி சித்தர் இருவரும் தனிச் சந்நதி கொண்டுள்ளனர். தங்கக் கவசம் சாத்தியுள்ளபடி, வேலாயுதசுவாமியை தரிசனம் செய்தவர்கள் மிகுந்த பாக்கியம் பெற்றவர்கள். ஒருபுறம் ஆறுமுகப் பெருமானும் திண்டல் மலையில் இடம் பெற்றுள்ளார். 300 செவ்வரளிப் பூக்களால் இவருக்கு அமாவாசை சஷ்டி, கிருத்திகை நாட்களில் ‘திரிசதீ’ வழிபாடும் நடைெபறுகிறது. 

திருச்செங்கோடு: ஈரோட்டிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் கிழக்குத் திசையில் அமைந்துள்ள திருச்செங்கோடு. இங்கே அர்த்தநாரீஸ்வரர் செங்கோட்டு வேலன், ஆதிகேசவப் பெருமாள் ஆகிய மூவருக்கும் தனித்தனி சந்நதிகள் உள்ளன. இங்கே நாகாசல மலையின் மீது கோயிலில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ள முருகப் பெருமான் வலது கையில் சக்தி வேலும், இடது கையில் சேவலும் தாங்கி நின்ற திருக்கோலத்தில் செங்கோட்டு வேலனாக, செங்கோடனாக காட்சி தருகிறார். விராலிமலை: திருச்சி மாவட்டத்தில் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது விராலிமலை. இந்த மலையில் முனிவர்களே குரா மரங்களின் வடிவில் இருந்து வழிபடுகிறார்கள். 

அதனால் மரங்களை யாரும் வெட்டுவதில்லை. மலைமீது ஷண்முக மூர்த்தி மண்டபத்தை ஒட்டிய ஆறுமுகப் பெருமானின் திருச்சந்நதி அமைந்துள்ளது. கருவறையில் ஆறுமுகப் பெருமான் மயில்மீது அமர்ந்து காட்சி தருகிறார். அவருக்கு இருபுறமும் வள்ளி தெய்வானை தேவியர் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்கள். பச்சைமலை: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்திற்கு மிக அருகில் 3 கி.மீ. தொலைவில் பவானி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது, பச்சைமலை. மலைமீது அழகிய படிகள் உள்ளன. 350 அடி உயரத்தில் அழகுற அமைந்திருக்கும் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வாகனங்கள் செல்ல சாலை வசதியும் உண்டு. 

ஐந்துநிலை கொண்ட ராஜகோபுரம், அதன் மத்தியில் ஒளிர்விடும் ‘சக்திவேல்’ கண்ணைக் கவருவதாக அமைந்துள்ளது. திருக்கோயில் எதிரே கொங்கு நாட்டிற்கே உரித்தான தீபஸ்தம்பம் கொண்ட நாற்கால் மண்டபம் உள்ளது. அதன் நான்கு மூலைகளிலும் மயில்கள் சுதை வடிவில் அமைந்துள்ளன. மேற்கு திசை நோக்கிய திருக்கோயில். உள்ளே அழகிய திருச்சுற்றும் அமைந்துள்ளது. கருவறையில்  வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகப் பெருமான் காட்சி தருகிறார். வெள்ளிக் கிழமைகளில் முருகனிடம் ‘பூவாக்கு’ கேட்டிட பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் கூடுவர். பவளமலை: பவளமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் என அழைக்கப்படும் அழகிய இத்திருக்கோயில் துர்வாச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறுகிறார்கள். 

இங்கு சிவபெருமான் கயிலாயநாதராகவும், அம்பிகை பெரிய நாயகியாகவும் எழுந்தருளியுள்ளனர். இங்கே கருவறையிலுள்ள முருகப் பெருமான் இளமை தோற்றத்துடன் கையில் தண்டுடன் இடையில் கோவணத்துடன் உச்சிக் குடுமியுடன் முத்துக்குமாரசுவாமியாக கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இத்தலம் கோபிசெட்டி பாளையத்திற்கு அருகில் உள்ளது. தீர்த்தகிரி: சென்னை  பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலாற்றின் தென்கரையில் வேலூருக்கு அருகேயுள்ள மலைமீது தீர்த்தகிரி முருகன் ஆலயம் அமைந்துள்ளது. முகப்பு கோபுரம், சுற்றுப் பிராகாரம், நுணுக்கமான கலை வேலைப்பாடுகளுடன் கூடிய மகா மண்டபம், அர்த்த மண்டபம், மூலவர் விமானம், எழில்மிகு கருவறை என அழகுடன் காட்சி தருகிறது. 

கோயிலுக்குள் அன்னை விசாலாட்சி சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர், மகாவிஷ்ணு, அன்னபூரணி, சரஸ்வதி, மகாலட்சுமி, துர்கா மற்றும் நவகிரகங்கள் அமைந்துள்ளன. கருவறையில் தேவியருடன் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை தரிசிக்கக் கண் கோடி வேண்டும். அவ்வளவு அழகு. இவர் மகா வரப்பிரசாதி என்கிறார்கள். இங்கு முருகனுக்கு ஆடிக் கிருத்திகை விழா வெகு சிறப்பு. கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், ஆண்டு விழா ஆகியன சிறப்பாக நடைபெறுகின்றன. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பர். வள்ளிமலை: வேலூரிலிருந்து 27 கி.மீ. தொலைவில் உள்ளது. வள்ளி பிறந்து வளர்ந்து தினைப்புனத்தில் ஆயலோட்டி முருகனை மணந்து திருத்தணி செல்லும் வரையிலுள்ள எல்லா நிகழ்ச்சிகளும் வள்ளியை  சிற்பமாகக் கண்டு வணங்கலாம். குடைவரை கோயில் குகையில் முருகன் இருப்பதால் அவனை குகன் என்று அழைக்கிறார்கள். 

கருவறையின் உச்சியில் உள்ள பாறை மேல் கருவறை விமானம் அழகாகக் கட்டப்பட்டிருக்கின்றது. இம்மலையில் முருகப்பெருமான் காலடி படாத இடமே இல்லை. அங்குள்ள ஒரு பிடி மணலை வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைத்துப் போற்றினால் முருகனின் அருள் கிடைக்கும் என்பார் வாரியார் சுவாமிகள். குன்றக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகிலுள்ளது, குன்றக்குடி. திருவண்ணாமலை ஆதின மடத்துக்கு உட்பட்ட கோயில் இது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்தான் கோயிலைத் திறம்பட நிர்வாகித்து வருகிறார். இங்கு முருகனுக்கு ஷண்முகநாதர் என்று பெயர். இங்கே மயிலின் தலை வடக்கு நோக்கியபடி இருக்கிறது மிகவும் விசேஷம். வள்ளி, தெய்வானை, ஷண்முகநாதன் மூன்று பேரும் தனித்தனியாக மயில் வாகனத்திலே உட்கார்ந்து அருள்பாலிக்கும் அழகே அழகு. மலையடிவாரத்திலே குடைவரை கோயிலில் அப்பன் சிவன் ஸ்ரீ தேனாற்றுநாதராகவும், அம்மை பார்வதி அழகுடைய நாயகியாகவும் இருக்க, மகன் ஷண்முகநாதன் மலையில் காட்சி தருகிற கோயில் இது. அதனால் பிள்ளை வரமும் தந்து அருள் வழங்குகிறார் முருகப்பெருமான்.